மத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை

மத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை
மத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை
Published on

மேகதாது உள்ளிட்ட நீர்வளத் திட்டங்கள் குறித்து தமிழக எம்.பிக்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார்.

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணைக் கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனிடையே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணைக் கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “உங்களுக்கு ஏதுவான சமயத்தில் மேகதாது விவகாரம் பற்றி நாம் டெல்லியில் சந்தித்து விவாதிக்கலாம்” எனக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேகதாது உள்ளிட்ட நீர்வளத் திட்டங்கள் குறித்து தமிழக எம்.பிக்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அதிமுக எம்.பிக்கள் மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியநாதன் உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்து கொண்டனர். 

மத்திய நீர்வளத்துறை சார்பாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, கோதாவரி நீர்திட்டங்கள், அணைகள் மறுசீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நீர்வளத்துறை சார்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் எம்.பிக்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படக்கூடாது என எம்.பிக்கள் விடுத்த கோரிக்கைக்கு தாங்கள் அதையும் கருத்தில் கொண்டிருப்பதாக நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com