பல்வேறு மாநில முதலமைச்சர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்தே நாடு தழுவிய ஊரடங்கில் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க மத்திய அரசு தளர்வு அளித்தது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால் மூன்றாம் கட்டத்தில் சில தளர்வுகளை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதில், மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஆர்வமுடன் மதுக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே மதுக்கடைகளை திறக்க பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுக்கடைகள் திறப்பது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, “வீடியோ கான்ஃபிரன்ஸில், ஊரடங்கு உத்தரவு காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட பணம் இல்லை எனத் தெரிவித்தனர். அதனைபோக்க மதுக்கடைகளை திறக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதனால்தான் மத்திய அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது” எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், “ கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. மார்ச் மாதத்தில் புனேவில் நாட்டில் ஒரு சோதனை ஆய்வகம் இருந்தது. ஆனால் இப்போது 821 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2,51,523 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் 27,000 ஐ.சி.யூ படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 60,884 வென்டிலேட்டர்களுக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றில் ஏற்கெனவே 19,000 கிடைத்துள்ளன" எனத் தெரிவித்தார்.