கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வது எப்படி? - முதியவர்களுக்கு சில டிப்ஸ்...!

கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வது எப்படி? - முதியவர்களுக்கு சில டிப்ஸ்...!
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வது எப்படி? - முதியவர்களுக்கு சில டிப்ஸ்...!
Published on

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து முதியவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒரே நாளில் உலக அளவில் கொரோனாவுக்கு சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 756 பேர் இறந்ததால் அங்கு மொத்த உயிரிழப்பு 10,778 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களில் வயதானவர்களே அதிகம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவுற்றவர்களையே கொரோனா அதிகம் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்பிக்கையும் அளிக்கிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் வயதானவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “முதியவர்கள் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. அறுவை சிகிச்சைகளை சில காலம் தள்ளி வைக்கலாம். கோயில்கள், சந்தைகள் போன்ற கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

வீட்டில் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடலாம். உறவினர் அல்லது நண்பர்களுடன் தொலைபேசி அல்லது காணொளி வாயிலாக பேசலாம்.” எனத் தெரிவித்துள்ளது.

இதேபோல், துப்புரவு தொழிலாளர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில், “பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலைகள், நடைபாதைகள் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான கையுறைகள், முகக்கவசஙக்ளை அணிய வேண்டும்.

வீட்டின் படிக்கட்டு கைப்பிடிகள், வாயில் கதவுகள், கதவின் கைப்பிடிகள், ஸ்விட்ச்சுகள், லிப்ட்டின் பொத்தான்கள், காலிங் பெல் போன்றவற்றை கிருமி நாசினி போட்டு துடைக்க வேண்டும். ரப்பர் காலணிகள், கையுறைகள், முப்பரிமான முகக்கவசங்கள் போன்றவற்றை தூய்மைப் பணியின்போது அணிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com