நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைகளில் 97.7 விழுக்காடு வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன. இதை மத்திய அரசின் அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் குறித்த மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, நாடு முழுவதும், 2022 ஆம் ஆண்டு, பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து 51,656 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில்
12,287 வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, மொத்தம் பதிவானவற்றில் 23.78 விழுக்காடு ஆகும்.
இதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. அம்மாநிலத்தில் 8,651 வழக்குகள் என 16.75 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 7,732 வழக்குகள் என 14.97 விழுக்காடு அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
பீகாரில் 1,799 வழக்குகள் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன. இது 13.16 விழுக்காடு ஆகும்.
ஒடிசாவில் 6.93 விழுக்காடு வழக்குகளும்,
மகாராஷ்டிராவில் 5.24 விழுக்காடு வழக்குகளும்
பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் பதிவான மொத்த வழக்குகளில், இந்த 6 மாநிலங்களில் மட்டும் 81 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவைதவிர, ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4 விழுக்காடு வழக்குகளும் தெலங்கானா, தமிழ்நாடு, ஹரியானாவில் தலா 3 விழுக்காடு வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2022 ல் பதிவான மொத்த வழக்குகளில் இந்த 13 மாநிலங்களில் மட்டுமே, 97.7 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன.
பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமை வழக்குகளில்
60.38 விழுக்காட்டிற்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
14.78 விழுக்காடு வழக்குகள், தவறான, ஆதாரமற்ற புகார் போன்ற காரணங்களால் இறுதி அறிக்கைகளுடன் முடித்துவைக்கப்பட்டுள்ளன.
17,166 வழக்குகள், நிலுவையில் உள்ளன.
இதே 13 மாநிலங்களில், 2022ம் ஆண்டில் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்கள் குறித்த வழக்குகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. இந்த 13 மாநிலங்களில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் குறித்து, 9,735 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 2,979 வழக்குகள் மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
பழங்குடியின மக்கள் தொடர்புடைய குற்றவழக்குகளில்
63.32 விழுக்காட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
14.71 விழுக்காடு வழக்குகள், தவறான, ஆதாரமற்ற புகார் போன்றவற்றால் இறுதி அறிக்கைகளுடன் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
2,702 வழக்குகள், புலனாய்வு நிலுவையில் உள்ளன.
எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கும் விகிதம் 2020 ஆம் ஆண்டுடன் 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. அதாவது, 2020 ஆம் ஆண்டில் வீதம் 39.2 விழுக்காடாக இருந்த தண்டனை விகிதம், 2022 ஆம் ஆண்டில் 32.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகளை விரைவில் நடத்துவதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் போதிய அளவில் இல்லை. 14 மாநிலங்களில் உள்ள 498 மாவட்டங்களில் 194 மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களை நிறுவியுள்ளன. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே வன்கொடுமை நடைபெறும் பகுதிகள் தனியாக அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திரா, அசாம், பீகார், இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், டெல்லி, ஜம்மு - காஷ்மீர், லடாக், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும், சண்டிகரிலும் எஸ்சி - எஸ்டி பாதுகாப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய சிறப்புக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.