செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
Published on

நாட்டில் கொரோனா வைரஸ் 2-ம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் (ஐ.வி.சி) கோவாக்சின் தடுப்பு மருந்துகளை தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக அறியப்படும் 'கோவாக்சின்' மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வைரலாஜி மையம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டறிந்தது. இதன்பின் நடந்த பல கட்ட சோதனைகளுக்கு பின் கோவாக்சின் மருத்துத் திறன் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த இந்திய அரசு மருந்துக்கு அனுமதி கொடுத்தது. அதன்படி, கோவாக்சின் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தற்போது சென்னை அருகே செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் (ஐ.வி.சி) கோவாக்சின் தடுப்பு மருந்துகளை தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமான ஐ.வி.சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிறுவப்பட்டது. இது 9 ஆண்டுகளாக உள்ளது; ஆனால் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட தயாரிக்கவில்லை. அதேநேரம் தற்போது கை சுத்திகரிப்பு மருந்துகள் மற்றும் ஆல்கஹால் சார்ந்த கிருமிநாசினிகள் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், 'தி பிரின்ட்' செய்தித் தளத்திடம் கூறும்போது, "அந்த ஆலையில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கக் கூடிய நிறுவனங்களை நாங்கள் தேடி வருகிறோம். பாரத் பயோடெக் டென்டர் விண்ணப்பதாரர்களில் ஒரு நிறுவனமாக இருக்கிறது. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஏனென்றால் அவர்கள் மட்டுமே இதுவரை தயாராக கொரோனா தடுப்பூசி வைத்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

ரூ.904 கோடி ஆலையைப் பெறுவதற்கான டென்டர் விண்ணப்பங்கள் ஜனவரி மாதமே வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான உடனடித் தேவையைப் பொறுத்தவரை, தற்போது பாரத் நிறுவனம் இந்தப் பணியை பெறுவதில் முன்னிலை வகிக்கிறது என்றுக் கூறப்படுகிறது. இதுவரை பாரத் பயோடெக் நிறுவனம் தொடர்பாக, இதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை.

இதற்கிடையே, தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பலமுறை புகார்கள் வந்துள்ளன. இந்தியாவில் உரிமம் பெற்ற இரண்டு கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமும் இயலாமைச் சூழல் இருப்பதாக சுகாதாரத் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி டோஸ் உற்பத்தி செய்வதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதேபோல், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி கோவிஷீல்ட்டின் இந்திய உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ), மாதத்திற்கு 6 முதல் 6.5 கோடி வரையிலான அளவினை உறுதிப்படுத்துகிறது. ஆனால், அதுவும் குறைந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் செங்கல்பட்டு ஆலையில் கொரோனா தடுப்பு மருந்து அமைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com