மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உதவி செய்வதற்காக இலவச ஹெல்ப்லைன் எண்களை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகளிடம் ஆட்டிசம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிந்து புரிந்துகொள்வதற்கு பெற்றோர்கள், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 1800-11-7776 இலவச அழைப்பு எண்ணை 24 மணி நேரமும் அழைக்கலாம்.
மனநலம் சார்ந்த பிரச்சினைகள், சிறப்புக்கல்வி, தொழில் சார்ந்த கவுன்சலிங், பேச்சுப்பயிற்சி மற்றும் அறிவுசார் குறைபாடு கொண்டவர்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சை தொடர்பான தகவல்களுக்கு 1800-572-6422 என்ற இலவச உதவி அழைப்பு எண்ணில் அழைக்கலாம். இந்த தொலைபேசி எண், அறிவுசார் குறைபாடு கொண்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய நிறுவனத்திற்குரியது.
உதவிகள், உதவிக்கருவிகள் மற்றும் அதுசார்ந்த சேவைகள் தொடர்பான தகவலுக்கு ALIMCO இலவச உதவி அழைப்பு எண் 1800-180-5129ல் அழைக்கலாம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அழைக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடன் திட்டம், திறன் பயிற்சி, திவ்யாங்ஜன் ஸ்வலாம்பன் யோஜனா, விசேஷ் மைக்ரோபைனான்ஸ் யோஜனா பற்றிய வழிகாட்டல் மற்றும் தகவலுக்கு NHFDC இலவச உதவி அழைப்பு எண் 1800-11-4515ல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.