ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மத்திய அரசு "பிரித்தாளும் கொள்கை”யின் மூலமாக மக்களை பிரித்து வாக்குகளை பெறுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக பேசிய மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி, "டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு -காஷ்மீரை ஒரு ஆய்வகமாகப் பயன்படுத்தி இங்கு சோதனை செய்கிறார்கள். நம்மை பிரிந்து ஆட்சி செய்வதே மத்திய அரசின் கொள்கை. அவர்களின் கொள்கை என்பது மக்களை பிரித்து தங்கள் வாக்குகளை அதிகரிப்பதாகும். மத்திய பாஜக அரசு நாட்டிலுள்ள சாலைகள், நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பெயர்களை மட்டும் மாற்றுகிறார்கள். ஆனால் பெயர்களை மாற்றுவதன் மூலம் குழந்தைகளுக்கு வேலை கிடைக்காது. அவர்கள் தலிபான், ஆப்கானிஸ்தான் பற்றி பேசுகிறார்கள். ஆனால் விவசாயிகள், வேலையின்மை மற்றும் ஊழல் பற்றி பேசுவதே இல்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் (UT) வேலையின்மை விகிதம் 18% ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஜம்மு -காஷ்மீரின் பொருளாதாரத்தை திணறடித்து வருகிறது. எங்கள் பொருளாதாரம் எதிர்காலத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் சார்ந்துதான் இருக்கும். கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு எந்த வேலையும் செய்யவில்லை. நாட்டில் நம்மிடம் உள்ளதை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள் அவ்வளவுதான்" என தெரிவித்தார்.