மக்கள் கண்காணிப்பகத்தின் மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மனித உரிமை அமைப்பான ‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீது மத்திய புலனாய்வுத்துறை ( CBI ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு மக்கள் கண்காணிப்பகம் தனது செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையாக நடத்தும் சமூக அமைப்பாகும். இந்தியா முழுவதும் அரசு அதிகாரத்தின் மூலமாகவோ, குழுக்கள் மூலமாகவோ நடைபெறும் மனித வதைகளையும், மனித உரிமை மீறல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று, நீதியைப் பெற்றுத்தரப் போராடும் அமைப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கண்காணிப்பகம் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆந்திர காடுகளில் அம்மாநில அரசால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கான நீதியைப்பெறுவதற்கான சட்டப் போராட்டத்தையும் மக்கள் கண்காணிப்பகம் முன்னின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் மக்கள் கண்காணிப்பகம் தனது செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் தணிக்கை அறிக்கையை இணையத்தளத்திலும் பதிவேற்றி வருகிறது. ஆனால் இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுகளால் மக்கள் கண்காணிப்பகம் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை முடக்கும் செயல்கள் தொடர்ந்து வருவது திட்டமிட்ட அதிகார அடக்குமுறையாகும்.
ஆகவே, இதன் பிறகாவது ஒன்றிய பாஜக அரசு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தடுக்கும் வகையிலான செயல்பாடுகளை தொடரக்கூடாது எனவும், மக்கள் கண்காணிப்பகத்தின் மீதான மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை உடனடியாகத் திரும்பப்பெற்று, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்திருக்கிறார்