பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க மத்திய அரசு கோரிக்கை வைத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் தீர்க்கமான போர் என இதை பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, பண மதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் பாராட்டிற்குரியது தான். ஆனால், அதற்காக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை எனினும், அறிவிப்பின் முறைகள் குறித்து ஆராய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவித்தது.
பல ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட 57 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணமதிப்பிழப்பு தொடர்பாக இன்னும் ஏதாவது விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறதா? என கேள்வி எழுப்பி, அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைய பணமதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26வது பிரிவின் கீழ் அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதும், பணமதிப்பிழப்பு செய்ய பின்பற்றப்பட்ட வழிமுறைகள் நியாயமானதா என்பதும் முக்கிய கேள்வி, அதை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததோடு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு எழுதிய கடிதம் ரிசர்வ் வங்கியின் போர்டு மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான தகவல்களை தாக்கல் செய்வதற்கும் தயாராக இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கிற்காக முழுமையாக தயாராகாததால் வழக்கினை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ராமணி கோரிக்கை வைத்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான சியாம் திவான்
அரசியல் சாசன அமர்வின் முன்பாக வழக்கை ஒத்திவைக்க யாரும் இதுவரை கோரிக்கை வைத்ததில்லை, தலைமை வழக்கறிஞர் உடைய கோரிக்கை புதிதாக உள்ளது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
சில முக்கியமான பிரச்சனைகள் காரணமாக தான் வழக்கை ஒத்தி வைக்க கோருவதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்த போது, பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இதுபோன்று வழக்கை விசாரிக்காமல் எழுந்திருப்பதில்லை, இந்த சூழல் சங்கடமாக இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று கடைசியாக கால அவகாசம் வழங்குவதாகவும் வழக்கின் விசாரணை நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.