அமேசான், நெட்பிளிக்ஸ் முதலான ஓடிடி (OTT) தளங்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த புதிய நெறிமுறையில் 'பற்களே இல்லை' என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
’தாண்டவ்’ வெப் சீரிஸ் தொடர்பான கைது நடவடிக்கையில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வேண்டி அமேசான் பிரைம் வீடியோ பிரிவின் வர்த்தகப் பிரிவு தலைவர் அபர்ணா புரோஹித் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓடிடி தளங்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட விதிமுறை குறித்து விமர்சித்ததோடு, அவருக்கு முன்ஜாமீனும் கொடுத்துள்ளது.
அதேநேரத்தில், வெறும் வழிகாட்டும் நெறிமுறைகளுக்குப் பதிலாக ஓடிடி தளங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வரைமுறையைக் கொண்டு வரும் வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“அமேசான், நெட்பிளிக்ஸ் மாதிரியான ஓடிடி தளங்களில் ஆபாசப் படங்கள் ஒளிபரப்பப்படுவதில்லை. அற்புதமான திரைக் காவியங்கள் இந்த தளங்களில் திரையிடப்படுகின்றன. மத்திய அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படி 'தாண்டவ்' தொடரில் சர்ச்சைக்குரிய இரண்டு காட்சிகளை நீக்கியுள்ளோம்” என அமேசான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.