குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு.
இந்தியாவில் குரங்கு அம்மை பரவலை தொடர்ந்து நோய் கண்டறிதல், வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்காக அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா திரும்பிய திருச்சூரைச்சோ்ந்த இளைஞா் பலியானார். எனவே நோய்த்தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்து விடாமல் தடுக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.
குரங்கு அம்மை நோய் இதுவரை கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் இறப்பு - விசாரணைக்கு உத்தரவு