இயற்கை வேளாண்மைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,000 ஹெக்டேரில் காய்கறி பயிர்கள் சாகுபடிக்காக மத்திய அரசு சென்ற நிதியாண்டில் ரூ.31.82 லட்சம் விடுவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் 4.09 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், பல்வேறு பயிர்கள் உற்பத்திக்கு, ரூ.49 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் செவ்வாய்க்கிழமையன்று அளித்த பதிலில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இயற்கை வேளாண்மை உள்ளிட்ட உள்நாட்டு பாரம்பரிய நடைமுறைகளை மேம்படுத்த, பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் துணைத்திட்டமாக இந்திய இயற்கை விவசாய முறையை அரசு 2020-21-ல் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் நிலத்தொகுப்பை உருவாக்குதல், பயிற்சி அளித்தல், கருத்தரங்குகளை நடத்துதல், போன்றவற்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,200 என 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.