பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிரதமர் மோடிக்கு ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதில் பெரிதும் விருப்பம் இல்லை என அவரது முன்னாள் முதன்மை செயலர் நிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் 70ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி அவர் தொடர்பான தகவல்களை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தித்தளத்திடம், மோடிக்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதன்மை செயலராக இருந்த நிபேந்திர மிஸ்ரா பகிர்ந்திருந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்ததாகவும், அவர் ஆலோசனையாளர்களை ஒருபோதும் குற்றஞ்சாட்டவில்லை என்றும் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.
பணமதிப்பிழப்பின்போது ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதில் பிரதமர் மோடிக்கு பெரிதும் விருப்பமில்லை. ஆனால் பணப்பற்றாக்குறை பெரிதும் இருப்பதாக கூறிய பின்னர் அவர் 2 ஆயிரம் நோட்டுக்களை பிரிண்ட் செய்ய ஒப்புக்கொண்டதாக மிஸ்ரா குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர் ஆண்டுதோறும் ரூ.2000 நோட்டுகள் குறைவாக பிரிண்ட் செய்யப்படுவதன் மூலம் பிரதமர் மோடி நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கிறார் என புரிகிறது என்றும் மிஸ்ரா கூறியிருக்கிறார்.
நாட்டில் கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுக்களை விட, இந்த ஆண்டு ரூ.6.58 லட்சம் கோடி குறைவாக பயன்படுப்பட்டுக்கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் ரூ.5.47 லட்சம் கோடிக்கு ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2018ஆம் ஆண்டும் ரூ.6.72 கோடி மதிப்புக்கு ரூ.2,000 நோட்டுகள் பிரிண்ட் செய்வது குறைக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். இதனால் நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணத்திற்காக நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது மக்களுக்கு தேவையான பணத்தை விரைந்து விநியோகிக்க ரூ.2000 நோட்டுகள் அதிகம் பிரிண்ட் செய்யப்பட்டன. 2017ஆம் ஆண்டிற்கு பின்னர் ரூ.2,000 நோட்டுகளை மக்கள் பயன்படுத்துவது அதிகம் குறைந்தது.
ஆனால், பணமோசடி, பணப்பதுக்கல் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றிற்கு ரூ.2,000 நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, ஆண்டு வாரியாக ரூ.2,000 நோட்டுகளை பிரிண்ட் செய்வதை படிப்படியாக மத்திய அரசு குறைத்து வருகிறது.