எல்ஐசி நிறுவன பங்குகள் விலை தொடர்ந்து சரிவுப்போக்கில் இருப்பது கவலை தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும் கூட பங்கு முதலீட்டாளர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கு விலக்கல் துறை செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு ஏற்பட்டதால் எல்.ஐ.சி பங்கு வெளியீடு தள்ளிப்போனது.
எல்.ஐ.சி பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை.
எல்ஐசி பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. தொடர்ந்து சரிந்து வந்த எல்ஐசி பங்கின் விலை தற்போது 708 ரூபாய் என்ற அளவு வரை குறைந்தது. இதனால் எல்ஐசி பங்குகளை ஆர்வத்துடன் வாங்கிய முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர்.