மருத்துவப்படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
‘உச்சநீதிமன்ற உத்தரவின்றி 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது’ என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு இந்த மேல்முறையீட்டை செய்திருக்கிறது. கடந்த ஆக.25ம் தேதி, திமுக சார்பில் தொடுக்கப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசு செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவில், ‘சென்னை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது’ என்பது போன்ற விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இவ்விவகாரத்தில் திமுக ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் திமுக தெளிவாக, “இந்த 10% இட ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அரசோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடர்ந்தால், எங்கள் தரப்பை விசாரிக்காமல் நீங்கள் தீர்ப்பளிக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளது. ஆகவே மத்திய அரசின் இந்த எதிர்ப்பு மனு விசாரணைக்கு வரும்போது இதுகுறித்து தமிழக அரசிடம் கருத்து கேட்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மனு, அடுத்த வாரத்தில், குறிப்பாக செப்.20ம் தேதி விசாரணைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில், இந்த 10% இட ஒதுக்கீடு, ஓ.பி.சி.க்கான 27% ஆகியவற்றை எதிர்த்து பல மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு, முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு கிடைக்கும்போதும் பதிலில்தான், நடப்பு ஆண்டு மருத்துவ கலந்தாய்வு - அதில் வரப்போகும் இட ஒதுக்கீடு என அனைத்தும் நிர்ணயிக்கப்படும். தங்களின் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.