மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11இல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் மறுநாளே ஒப்புதல் அளித்தார். பின்னர், 2020ஆம் ஆண்டே இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது மத்திய அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
அதாவது அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய 6 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேற குடியுரிமை பெற முடியும்.