கண்காணிப்பு வட்டத்திற்குள் மத்திய அரசு ஊழியர்கள்?

கண்காணிப்பு வட்டத்திற்குள் மத்திய அரசு ஊழியர்கள்?
கண்காணிப்பு வட்டத்திற்குள் மத்திய அரசு ஊழியர்கள்?
Published on

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த டெபாசிட் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. அதாவது பணமதிப்பு நீக்கப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளில் 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய வங்கி கணக்குகளில் தனி நபர்களின் பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் சந்தேகிக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி நிருபர்களிடம் அளித்த பேட்டியில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்த அதிக அளவிலான பணத்தின் மதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் கேட்டு இருக்கிறோம். இதுபற்றிய விசாரணையை மேற்கொள்வதற்காக கூடுதலான சீரமைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு உள்ளது.

இவர்களது வங்கி கணக்குகளில் செலுத்திய பணம் உண்மையிலேயே அவர்களுடைய வருமானம்தானா? இல்லையா? என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கப்படும். அனைவர் மீதும் அவர்கள் ஊழியர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இது தொடர்பான நடவடிக்கைகளை ஏற்கனவே வருமான வரி இலாகாவின் தலைமை அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்து இருக்கும். இருந்தபோதிலும், மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் இருந்து ஆய்வு செய்வதற்காக இதுபற்றிய தகவல்களை கேட்டு இருக்கிறோம். இதுகுறித்து அவர்களுடன் தொடர்ந்து விவாதித்து உள்ளோம். அவர்களும் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்." என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com