காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அங்கு செல்போன் இணைய சேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். இதனிடையே, நேற்று இரவு அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதி வழியாக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 7 யாத்ரீகர்கள் பலியான நிலையில், இன்று காலை முதல் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தீவிரவாத தாக்குதல் காரணமாக, ஜம்முவில் செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் சேவை மட்டும் குறைந்த அளவிலான வேகத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.