பெங்களூருவை சேர்ந்த பிரபல பைக் ரைடர் ஒட்டகத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் கிங் ரிச்சர்டு ஸ்ரீனிவாசன். 45 வயதான இவர் பெங்களூருவில் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். தேசிய அளவில் பிரபலமான பைக் ரைடரான இவர் இதுவரை ஐந்து கண்டங்களிலுள்ள 37 நாடுகளுக்கு பயணம் செய்து 65 ஆயிரம் கி.மீ தூரம் பைக்கிலேயே பயணித்து சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது 8000 ஆயிரம் கி.மீ பயணமாக பெங்களூருவிலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மருக்கு சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்றிருக்கிறார். ஜனவரி 23ஆம் தேதிவரை சுற்றுலாவுக்கு திட்டமிட்ட இவர், புதன்கிழமை ஃபடேகர் பகுதியில் தனது BMW GS வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஒரு ஒட்டகம் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அப்பகுதி காவல் அதிகாரி கரண் சிங் சரண் தெரிவித்திருக்கிறார். மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, வியாழக்கிழமை பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ரிச்சர்டு பெங்களூருவிலிருந்து லண்டன் வரை மோட்டார்சைக்கிளிலேயே சென்று சாதனை படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு தென் மற்றும் வட அமெரிக்கா முழுவதையும் பைக்கிலேயே சுற்றிவந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.