சண்டிகரைச் சேர்ந்தவர் கஃபி (Kafi). 15 வயதான அந்தச் சிறுமி, தன்னுடைய 3வது வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார். அவர் தன் பெற்றோருடன் ஹிசார், புதானா கிராமத்தில் வசித்தபோது, பக்கத்துவீட்டைச் சேர்ந்த மூன்று பேரால் எதிர்பாராதவிதமாக ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார். இந்த தாக்குதலில் கஃபியின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன், அந்தச் சிறுமி பார்வையையும் இழந்தார். இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கஃபியை அவரது பெற்றோர், அனைத்து மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், கஃபிக்கு பார்வை மட்டும் மீண்டும் கிடைக்கவில்லை. அவருக்கு பார்வை வருவதற்காக, கஃபியின் தந்தை அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்களும், ”கஃபிக்கு மீண்டும் பார்வை கிடைப்பது என்பது இயலாத காரியம். அவர், வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவராகவே இருப்பார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தன் மகள் பாதிக்கப்பட்டதற்காக நீதியைத் தேடி சிறுமியின் தந்தை போராடினார். அவருடைய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. ஹிசார் மாவட்ட நீதிமன்றம் பாதிப்பை ஏற்படுத்திய நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. எனினும், அந்த தண்டனை முடிந்து அவர்கள் தற்போது விடுதலை பெற்றுள்ளனர். இது கஃபியின் குடும்பத்தை மேலும் கவலையடையச் செய்தது. ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளி சாதிக்க வேண்டும் என நினைத்த கஃபி, தற்போது சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில், 95.2% மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
தன் சாதனை குறித்து கஃபி, “ஒருநாளைக்கு 5 முதல் 6 மணிநேரம் வரை படிப்பேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எனது பெற்றோரையும், ஆசிரியரையும் பெருமைப்படச் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கஃபி தனது எட்டு வயதிலேயே ஹிசார் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கத் தொடங்கினார். அவர் அங்கு தனது முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளை முடித்தார். பின்னர், அப்பள்ளியில் வசதிகள் இல்லாததால், அவரது குடும்பம் சண்டிகருக்கு மாறியது. சண்டிகரில் உள்ள பார்வையற்றோர் நிறுவனத்தில் பிரிவு 26இன்படி, கஃபி, 6ஆம் வகுப்புக்கு நேரடியாக அனுமதி பெற்றார். கஃபியின் தந்தை சண்டிகர் செயலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பியூனாக பணிபுரிந்து வருகிறார். ”வறுமையும் சவாலும் தன் முன் நின்றபோதும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் படிப்பின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்தினேன்” என்கிறார், கஃபி நம்பிக்கையுடன்.