நிலக்கரி மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக்குமாறு மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ள சாரதா சிட்பண்ட் ஊழல், நிலக்கரி ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. அதிகாரிகள் துரிதமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வினய் மிஸ்ராவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதற்கிடையே, நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக புரூலியா, பாங்குரா, புர்துவான், கொல்கத்தா உள்பட 13 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நிலக்கரி மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி ஆவார். மேற்கு வங்க அரசியலை பொறுத்தமட்டில் மம்தா பானர்ஜியின் நிழலாகவும், திரிணாமுல் காங்கிரஸில் செல்வாக்கு வாய்ந்த நபராகவும் கருதப்படுபவர் அபிஷேக் பானர்ஜி. இவரை காரணம் காட்டியே மம்தா பானர்ஜி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.