பாலியல் புகார் தெரிவித்த உன்னாவ் பெண் விபத்து வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் கூறினார். அதாவது அப்பெண் 16 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க, சென்றபோது, அவரை எம்.எல்.ஏ குல்தீப், பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். உடன் அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற அவரது தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார்.
இதனைத் தொடர்ந்து அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபரேலி-க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர்.
மேலும் அப்பெண்ணும் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வழக்கு சிபிஐக்கு நேற்று மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த விபத்து தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தக் கொலை முயற்சிக்காகவும், கொலைக்கு திட்டம் தீட்டியதாகவும் 20 பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.