சாரதா நிதிநிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
சாரதா நிதிநிறுவன முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற இவ்விசாரணைக்கு டெல்லியிலிருந்து மூத்த சிபிஐ அதிகாரிகள் வந்திருந்தனர். இந்த விசாரணை இன்றும் நீடிக்கிறது.
சாரதா நிதிநிறுவன முறைகேடு விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரை விசாரிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர்களை கொல்கத்தா போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்த நிலையில் மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராஜிவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேகாலயாவின் ஷில்லாங்கில் ராஜிவ் குமாரை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் நேற்று விசாரணை நடந்தது. இன்றும் விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. குணால் கோஷ், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு இன்று வந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’சிபிஐ, இன்று என்னை இங்கு ஆஜராக சொல்லியிருந்தது. அதனால், இங்கு வந்தேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்’’ என்றார்.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.