நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீட் முறைகேடு புகார்கள் குறித்து 6 வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ, இதுதொடர்பாக குஜராத் , டெல்லி , ஜார்க்கண்ட் , பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை கசிய விட்டது தொடர்பாக பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் உதவி செய்ததன் அடிப்படையில் வினாத்தாளை கசியவிட்டதாக கூறினார். இதையடுத்து அந்த பத்திரிகையாளரும் சிபிஐ அதிகாரிகளால் 3வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் கோத்ரா , கேரா , அகமதாபாத் மற்றும் அனந்த் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே , நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக அகில இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் , நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர்.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு , தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய வழிமுறைகளை ஆலோசித்து வருவதாகவும், குறிப்பாக பெற்றோர்களிடமிருந்து பரிந்துரைகளை பெறவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக அக்குழு பரிந்துரை வழங்கிய நிலையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.