சாரதா சிட்பண்ட் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பதவியேற்றுக் கொண்டார்.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில், நாகேஸ்வர் ராவ் அந்த அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிபிஐக்கு ரிஷிகுமார் சுக்லாவை புதிய இயக்குநராக நியமிப்பதாக பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. எனினும், சிபிஐயில் பணிபுரிந்த அனுபவமே இல்லாத ஒருவரை அந்த அமைப்பின் தலைவராக நியமித்ததற்கு தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.
மேலும் சிபிஐயில் 12 ஆண்டு அனுபவமுள்ள ஜாவேத் அகமது என்பவரை கார்கே பரிந்துரைத்ததாகவும் ஆனால், அதை தேர்வுக்குழு தலைவரான பிரதமர் மோடி ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சர்ச்சைகளுக்கு இடையில் ரிஷிகுமார் சுக்லா இன்று பதவியேற்றுள்ளார். சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா ஆணையரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்யும் விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், ரிஷிகுமார் தன் பணியை தொடங்கியுள்ளார். சாரதா சிட்பண்ட் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் சுக்லாவுக்கு இது சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.