கனரா வங்கியில் ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி .தினகரன் முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16 ஆம் தேதி இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து 25-ம் தேதி நள்ளிரவில் டிடிவி தினகரனை கைது செய்தனர். அவரது நண்பர் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சுகேஷ் சந்திரசேகர் குறித்து போலீசார் மேலும் விசாரித்தபோது, அவர் மீது மேலும் பல மோசடி வழக்குகள் உள்ளதை கண்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணக்கு வந்தது. வழக்கு விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
சிபிஐ நீதிமன்றம் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜீன்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.