சுமார் 3,700 கோடி ரூபாய் வங்கி மோசடி புகார்கள் தொடர்பாக நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொதுத்துறை வங்கிகள் அளித்த புகார்கள் மீது பதிவு செய்யப்பட்ட 30 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் 11 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருவாரூர், வேலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. ஏமாற்றுதல், நிதியை தவறாக பயன்படுத்துதல், போலி ஆவணங்கள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடிப்படையில் சிபிஐ சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கெய்த்தன் மின்விசிறி தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலை மேம்படுத்துவதற்காக 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்தில் பல்வேறு வங்கிகளில் இந்த நிறுவனம் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும், வாங்கிய கடனை உரிய காரணத்துக்காக பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்துவதாகவும் வங்கிகள் கண்டறிந்தன.
266 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தெரிய வந்தது. கெய்த்தான் நிறுவனத்தின் மீதும், நிர்வாக இயக்குனர் சுனில் கிருஷ்ணா கெய்த்தான் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் என 13 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.