2 வயது குழந்தைக்கு சொந்த பாட்டியே மெழுகு வர்த்தியால் கதற கதற சூடு வைக்கும் கொடுமை டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் 2 வயது குழந்தை ஒன்று வீட்டிலிருந்து வெளியே செல்ல முயன்றதற்காக ஒரு பெண் அதை இரக்கமின்றி தாக்குகிறார். அத்துடன் குழந்தை கதறி அழுவதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது, எரியும் மெழுகுவர்த்தியில் இருந்து சூடாக உருகும் மெழுகை வைத்து அந்தக் குழந்தையின் கையில் சூடு போடுகிறார். வலியால் குழந்தை அலறித்துடிக்கிறது.
இந்த கொடுமை நடைபெறுவதை அருகே உட்கார்ந்து மற்றொரு பெண் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அதே அறையில் அமர்ந்திருக்கும் வேறொரு பெண் கைகொட்டி சிரிக்கிறார். பின்னர் அந்தக் குழந்தையை அப்பெண் தலையில் கொட்டுகிறார். அதுமட்டுமின்றி முதுகு மற்றும் வயிற்றில் வேகமாக குத்துகிறார். வலியால் துடிக்கும் குழந்தை கதறி அழுகிறது. உடனே அப்பெண் வாயில் துணியை வைத்து சத்தம் போடாதே என அமுக்குகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதும், உடனே தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரியத்தின் தலைவர் ரேகா ஷர்மாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் அந்த குழந்தையை தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண் அந்தக் குழந்தையின் சொந்தப் பாட்டி என்பதும், மற்ற பெண்கள் அந்தக் குழந்தையின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்தக் குழந்தையின் தாய் பிரிந்து சென்றுவிட்டார் என்பதும், தற்போது அந்தக் குழந்தை பாட்டியின் வளர்ப்பில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.