குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் சாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் தொடர்பாக அரசின் விளக்கத்தை டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர்களாக ஜாட், ராஜ்புத், சீக்கியர்கள் ஆகிய 3 பிரிவினரை மட்டுமே சேர்ப்பதாக ஹரியானாவைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம், ராணுவ தளபதி, ராணுவ பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவருக்கான பாதுகாவலர்கள் தேர்வு நடைபெற்றதாகவும் அதற்கு ஜாட், ராஜ்புத், சீக்கியர் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்ததாகவும் கவுரவ் யாதவ் தன் மனுவில் கூறியிருந்தார். இப்பணிக்கு மற்ற பிரிவினர் உரிய தகுதி பெற்றிருந்தும் சாதியை மட்டுமே காரணம் காட்டி அவர்கள் அழைக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியிருந்தார். பாரபட்சமான இக்கொள்கையை அரசு கைவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் கோரியிருந்தார்.