ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 மருத்துவ மாணவர்கள் காயமடைந்ததிருப்பதாக ஜம்மு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
ஜம்முவை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் தனது நண்பர்கள் உள்ள வாட்ஸ் அப் குழுவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பகிர்ந்துள்ளார். இது அக்குழு மாணவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவர்கள் இருவேறு குழுக்களாகப்பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுள்ளனர். இச்சண்டையின் எதிரொலியாக, கடந்த ஞாயிறன்று அம்மாணவர்கள் தங்கி இருந்த விடுதி வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மாணவர்களை தாக்கியிருக்கின்றனர். இத்தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும் , சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஷாஷீ சூதன் போலீசாரிடம் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர், “இத்தாக்குதலில் கல்வி நிறுவன மாணவர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மாணவர்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மோசமாக தாக்கப்பட்ட 23 வயது மாணவர் உட்பட 10 பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்த 10 மாணவர்களும், கல்லூரி விடுதியிலிருந்தும் 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
“இவ்விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கிவிட்டது. ஜம்மு பகுதியில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது” என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
திரைப்படமொன்று மாணவர்களை கைகலப்புக்கு இட்டுச்சென்றிருப்பது, கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.