சுஷில் பண்டிட் காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர். இவர் அக்டோபர் 28 2010 ஆம் ஆண்டு திலக்மார்க் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அக்டோபர் 21 ஆம் தேதியன்று 'Azadi - The Only Way' எனும் தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட மாநாட்டில் சிலர் ஆத்திரமூட்டும் பேசியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹூசைன், சையத் அலி ஷா கிலானி மற்றும் வரவர ராவ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். மாநாட்டில் பேசிய அவர்கள், காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இல்லை என்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
இதன் காரணமாக மாநாட்டில் பங்கேற்றவர்கள் "காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிப்பது" தொடர்பாக பிரச்சாரம் செய்ததாக பண்டிட் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு ஒன்றையும் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேசத்துரோகம் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மீண்டும் வழக்கு பதிவு செய்ய டெல்லி லெப்டினண்ட் ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 153A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 153பி (குற்றச்சாட்டுகள், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான கூற்றுகள்), மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக டெல்லி துணை நிலை ஆளுநரின் அனுமதிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “டெல்லி துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் சகிப்புத்தன்மைக்கு இடமே இல்லை. கருத்துக்கள் முன் வைக்கப்படும் போது அரசானது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
கருத்து சுதந்திரத்திற்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. காலனி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச துரோக சட்டத்தை எதிர்க்கிறேன். சட்டப்பிரிவு 124ஏ அடிக்கடி தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும். வன்முறை போக்குகளை எதிர்கொள்ள மற்ற சட்டப்பிரிவுகள் நிறையவே இருக்கின்றன” என்றார்.