பிரதமர் மோடி பெயரில் மீம் வெளியிட்ட ஏஐபி (AIB) காமெடி குழுவைச் சேர்ந்த தன்மய்பட் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்டேண்ட் அப் காமெடி குழுவான ஏஐபி, பிரதமர் மோடியைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் ரயில் நிலையம் ஒன்றில் ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டது. அதில் ஸ்நாப்சாட் சமூகவலைதளத்தில் உள்ள டாக் ஃபில்டரை மோடி பயன்படுத்தி இருப்பது போன்ற மீம் ஒன்றை அவர்கள் பதிவிட்டனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அந்த அமைப்பினர் வெளியிட்ட புகைப்படத்தை மும்பை போலீசாருக்கு டேக் செய்து நெட்டிசன் ஒருவர் புகார் செய்தார். இந்த மீம் பிரதமர் மோடிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், அதனால் ஏஐபி குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர், தனது புகாரில் தெரிவித்தார். இதையடுத்து தன்மய் பட் தலைமையிலான ஏஐபி அமைப்பு மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.