“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?”- ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைதளங்களிலும் இவர் கூறும் கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில் “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து ராம்கோபால் வர்மா மீது தெலங்கானா பாஜக தலைவர் கூடூர் நாராயணா ரெட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கோரியுள்ளார். புகார் குறித்து பேசிய ஐதராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி பிரசாத் ராவ், "புகாரை பெற்று, சட்ட ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனை பெற்ற பின், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வர்மா மீது வழக்குப்பதிவு செய்வது பற்றி முடிவு எடுப்போம்" என்றார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராம் கோபால் வர்மா உடனடியாக தனது கருத்துக்கு விளக்கம் அளித்து ட்வீட் செய்தார். அதில்,“கேலிக்காக சொல்லப்பட்டதே தவிர, வேறு எந்த வகையிலும் சொல்லவில்லை. மகாபாரத கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரௌபதி. அதனால் மிகவும் அரிதாக தென்பட்ட இந்த பெயரை, அந்த கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் தோன்றியதால், அதனை வெளிப்படுத்தினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் மனோஜ் சின்ஹா என்பவர் வர்மாவுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இதன்படி ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ராம் கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.