3வது முறையாக எம்எல்ஏவாகும் மும்பை தமிழர்|அமைச்சர் பதவி கிடைக்குமா? யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்?

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன், 3வது முறையாக எம்.எல்.ஏவாகும் வாய்ப்பில் உள்ளார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில், இந்த முறை அமைச்சராகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்எக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிரா|பாஜக கூட்டணி அமோக வெற்றி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) நடைபெற்று வருகிறது. அதன்படி, பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. தற்போது வரை அக்கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன. இதனால், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. என்றாலும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போதே தொடங்கிவிட்டது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன், 3வது முறையாக எம்.எல்.ஏவாகும் வாய்ப்பில் உள்ளார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில், இந்த முறை அமைச்சராகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ச்செல்வன்
மகாராஷ்டிரா | ஏக்நாத்தா ஃபட்னாவிஸா... அடுத்த முதல்வர் யார்? 2019-ல் நடந்தது என்ன? இந்தமுறை எப்படி?

மும்பை சயான் கோலிவாடா தொகுதி: மீண்டும் கேப்டன் முன்னிலை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கணேஷ் குமார் யாதவும், பாஜக சார்பில் தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஏற்கெனவே, இந்த தொகுதியில் இருந்து பாஜக சார்பில் 2 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர் தமிழ்ச்செல்வன். இதனால் இந்த முறையும் அங்கு கடுமையான போட்டி நிலவியது. அந்த வகையில், தற்போதும் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அவர் மிகவும் நெருக்கம் என்பதால் இந்த முறை மகாராஷ்டிர கூட்டணி அரசில் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

யார் இந்த ’கேப்டன்’ தமிழ்ச்செல்வன்?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர், கேப்டன் தமிழ்ச்செல்வன். மும்பையிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் இவர்தான். இவரது குடும்பத்தினர் தற்போதும் புதுக்கோட்டையில்தான் உள்ளனர். 14 வயது முதல் மும்பையில் வசித்து வரும் தமிழ்ச்செல்வன், வெறும் 9 ரூபாய் சம்பளத்திற்கு தன்னுடைய முதல் வேலையில் சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சிரமப்பட்ட அவர், அதன்பின்னர் சிறு தொழில்கள் மூலம் தனது வருமானத்தை ஈட்டியுள்ளார். பிறகு, அதன்மூலம் பலருக்கும் உதவி செய்துள்ளார். இவருடைய தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த காலத்தில், தாராவியில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டபோது எட்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் மூலம் பேசுபொருளானார். இவர், ஆரம்பம் முதலே பாஜகவில் ஈடுபாடு காட்டி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக இருக்கும் ஒரே தமிழர் தமிழ்ச்செல்வன்தான். தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற இருக்கிறார் கேப்டன் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச்செல்வன்
மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை | பாஜக முன்னிலை.. “இது எப்படி சாத்தியம்?” - சஞ்சய் ராவத் கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com