வீரமரணம்அடைந்த கேப்டன்|கோரிக்கை வைத்த பெற்றோர்..மவுனம் காக்கும் மனைவி..பங்கு பிரிக்கப்பட்டது எப்படி?

ஆர்மி குரூப் இன்சூரன்ஸ் ஃபண்ட் (AGIF) ரூ. 1 கோடி தொகையை, அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு இடையே பிரித்து வைக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
ஸ்மிருதி சிங்
ஸ்மிருதி சிங்எக்ஸ் தளம்
Published on

கேப்டனின் மனைவி மீது தவறான கருத்து பதிவிட்ட பயனர்!

இந்திய ராணுவத்தின் 26வது பஞ்சாப் படைப்பிரிவில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய கேப்டன் அன்ஷுமான் சிங், கடந்த ஆண்டு (ஜூலை 19ஆம் தேதி, சியாச்சினில் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து வீரமரணம் அடைந்தார். கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தியாகத்தைப் போற்றும்வகையில் அவருக்கு, சமீபத்தில் கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்கிற்கு வழங்கியிருந்தார்.

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதில் டெல்லியைச் சேர்ந்த அகமது.கே என்ற நபர் ஒருவர், ஸ்மிருதியின் கைம்பெண் கோலத்தை வைத்து மிகவும் இழிவான முறையில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக, அவருடைய கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் (NCW) கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்மீது டெல்லி காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக, டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மிருதி சிங்
”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா பதில்

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, ”இந்த விவகாரத்தில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம். என்றாலும், அந்தக் கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக இதுவரை எந்த உண்மையும் வெளிவரவில்லை. ராணுவ வீரர்களின் மனைவிகள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராக இதுபோன்று பேசினால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்” என ஏ.என்.ஐ. நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அன்ஷுமன் சிங்கின் தந்தை ரவி பிரபாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ”இவ்வாறு ஒருவர் கருத்து வெளியிடுவது மிகவும் ஆட்சேபனைக்குரியது. எனது நாட்டின் சட்டம்-ஒழுங்கு அமைப்பில் நீதி கிடைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதை, எனது மருமகள் மீது கூறப்பட்ட அநாகரிகமான கருத்து என நான் கருதவில்லை. மாறாக, ஒரு துணிச்சலான போராளியின் விதவையின் மீது கூறப்பட்ட அநாகரீகமான கருத்து என நான் கருதுகிறேன். நீதி கிடைக்கும் நாளுக்காக காத்திருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி சிங்
வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இழிவாகப் பேசிய நபர்... எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்த டெல்லி காவல்துறை!

மருமகள் மீது குற்றஞ்சாட்டிய கேப்டனின் பெற்றோர்

முன்னதாக இவர், (ரவி பிரபாத் சிங்) ”எங்கள் மருமகள் (ஸ்மிருதி) எங்களுடன் வாழவில்லை. திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன. குழந்தை இல்லை. எங்கள் மகன் சுவரில் மாலையுடன் தொங்கும் புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது. எங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு பெரும்பாலான உரிமைகளை ஸ்மிருதி பெறுகிறார். NOKக்கு அமைக்கப்பட்டுள்ள அளவுகோல் சரியானது அல்ல. அதனால்தான் NOK-இன் வரையறை சரி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மருமகள் குடும்பத்தில் தங்கினால், யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும். மற்ற பெற்றோர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக NOK விதிகளை அரசாங்கம் திருத்த வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறோம். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு அவருடைய மருமகளும் வீரமரணமடைந்த அன்ஷுமன் சிங் மனைவியுமான ஸ்மிருதி சிங் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் அவர் கண்ணியமான மௌனத்தையே பதிலாகத் தந்துவருகிறார். பல செய்தி சேனல்கள் அவரை அணுக முயற்சித்தாலும், அவர் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி சிங்
கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

மனைவிக்கும் பெற்றோருக்கும் பிரித்து வழங்கப்பட்ட தொகை!

ஆனால், ஆர்மி குரூப் இன்சூரன்ஸ் ஃபண்ட் (AGIF) ரூ. 1 கோடி தொகையை, அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு இடையே பிரித்து வைக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அதாவது ஸ்மிருதி சிங்கிற்கு தலா ரூ.50 லட்சத்தையும், அன்ஷுமன் சிங்கின் பெற்றோருக்கு தலா ரூ.50 லட்சத்தையும் பிரித்து வழங்கியிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரத்தில் அன்ஷுமன் சிங் ஓய்வூதியத் தொகை மட்டும் அவருடைய மனைவிக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.50 லட்சம் நிதியுதவியில் தலா ரூ.35 லட்சம் அவரது மனைவிக்கும், ரூ.15 லட்சம் அவரது பெற்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அன்ஷுமான் சிங்கின் தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜூனியர் கமிஷன்ட் ஆபீஸர் (ஜேசிஓ) என்பதும், அவர் ஓய்வூதியம் பெறுபவர் என்பதும், முன்னாள் ராணுவ வீரர் என்ற முறையில் இதர சலுகைகளையும் பெறுவதும் தெரியவந்திருப்பது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெறும் நிதி ஆதாயத்துக்காக ஸ்மிருதி சிங்கை அன்ஷுமான் சிங்கின் பெற்றோரே அசிங்கப்படுத்தியிருப்பதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்க: தொடரும் குற்றச்சாட்டுகள்! சூடுபிடிக்கும் விசாரணை- பதவி பறிபோகுமா?பெண் IAS அதிகாரியின் தந்தை பதில்

ராணுவத்தில் PF மற்றும் ஓய்வூதிய விதிகள்

ராணுவத்தில் ஓர் அதிகாரி நியமிக்கப்படும்போது, ​​ராணுவக் குழுவின் காப்பீட்டு நிதி (ஏஜிஐஎஃப்), பிராவிடண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகியவற்றுக்கு மிக நெருக்கமான நாமினியை அந்த வீரர் குறிப்பிடுவார். காப்பீட்டு நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகள் வழங்கப்படலாம். ஆனால் ஓய்வூதியத்திற்காக ராணுவத்தால் அத்தகைய விருப்பம் வழங்கப்படுவதில்லை.

ராணுவத்தில் சேரும் நேரத்தில் அதிகாரிகள் பெரும்பாலும் திருமணமாகாதவர்கள். இதுபோன்ற சூழ்நிலையில், பெற்றோர்கள் முதல் நாமினியாக இருந்தாலும், அதிகாரிகளின் திருமணத்திற்குப் பிறகு, அதை புதுப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், காப்பீட்டு நிதி மற்றும் பிஎஃப் ஆகியவற்றின் தொகை மனைவி மற்றும் பெற்றோருக்கு இடையே பாதியாகப் பிரிக்கப்படுகிறது. ஆனால் ஓய்வூதிய விஷயத்தில், ஒரு நாமினியை மட்டுமே உருவாக்க முடியும். அதன்படி, திருமணத்திற்குப் பிறகு மரணமடைந்த அன்ஷுமான் தனது மனைவி ஸ்மிருதி சிங்கை நாமினியாக நியமித்திருந்தார்.

இதையும் படிக்க: தடுமாற்றத்தின் உச்சம்| உக்ரைன் அதிபரை ‘புடின்’ என தவறாக அழைத்த ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் மாற்றமா?

ரேஷ்மா செபாஸ்டியனை ட்ரோல் செய்த பயனர்கள்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கேரளாவைச் சேர்ந்த பிரபல fashion influencer ஆன ரேஷ்மா செபாஸ்டியனை, அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் என இன்ஸ்டாவில் ட்ரோல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ரேஷ்மா தற்போது விளக்கமளித்துள்ளார். “அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் என இணையத்தில் வெளியாகும் புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல” என தெரிவித்திருப்பதுடன், ”இதுதொடர்ந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

ரேஷ்மா செபாஸ்டியன் தனது கணவர் மற்றும் மகளுடன் ஜெர்மனியில் வசித்து வரும் நிலையில், தற்போது அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com