உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதியில் பணியாற்றவிருக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கேப்டன் ஷிவா சௌகான் பெற்றுள்ளார்.
அந்தப் பெண் சியாச்சினில் உள்ள போர்ப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னர், தற்போது பிற வீரர்களுடன் பனிச்சிகரத்தை சென்றடைந்துள்ளார். மிகவும் துடிப்பான பெண்ணான ஷிவா, போர்ப் பயிற்சிப் பள்ளியில் பொறுமை பயிற்சி, பனிச் சுவற்றில் ஏறுதல், பனிச்சரிவு மற்றும் பள்ளத்தாக்கில் சிக்கியோரை மீட்பது, உயிர் வாழும் பயிற்சிகள் உள்ளிட்ட மிகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி சியாச்சின் பனிப்பாறையில் கடினமான ஏறுதல் பயிற்சிக்குப் பின்னர் கேப்டன் ஷிவா சௌகான், படையில் சேர்க்கப்பட்டதாகவும் ராணுவம் கூறியிருக்கிறது. கேப்டன் ஷிவா தலைமையிலான குழு, போர் பொறியியல் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும். கடும் சவாலான சியாச்சின் போர்க்களப் பணியை மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாக ஷிவா சௌகான் தெரிவித்துள்ளார்.