தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை விளம்பரப்படுத்த தவறும் வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்றவழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் மூன்று முறையாவது கட்டாயம் விளம்பரப்படுத்தவேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 10ம் தேதி அறிவுறுத்தியிருந்தது.
அதோடு அரசியல் கட்சிகளும் தாங்கள் நிறுத்துகிற வேட்பாளர் மீதான குற்ற வழக்குகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், வழக்கு அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்று கூறியிருந்தது.
மேலும் வேட்பாளர் பற்றிய குற்றப்பின்னணி தொடர்பாக தவறான தகவல்களை மற்றொரு வேட்பாளர் வெளியிட்டால், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-ஜி படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிஸோரம் மற்றும் தெலங்கானாவில் நடைபெறும் தேர்தல்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைப்படி அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் மீது உள்ள குற்றப்புகார்கள் குறித்து விளம்பரப் படுத்த வேண்டும். விளம்பரப்படுத்துவதற்கான செலவை அந்தந்த வேட்பாளரோ, கட்சியோ ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அது தேர்தல் செலவில் ஓர் அங்கமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.