கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியி ருந்தவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் தொடர்ந்து முகாமில் இருக்கின்றனர். சுமார் 1 லட்சத்துக் கும் அதிகமானோர் அதில் தங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ள நிவாரண நிதிக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த 70 வயது முதியவர் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிம்ஜி பிரஜாபதி. வயது 70. நடக்க முடியாத இவர், கம்புகளை ஊன்றிக்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தார். நேராக ஆட்சித் தலைவரைச் சந்தித்தவர் தன்னிடம் இருந்த ரூ.5000 ரூபாயை அவரிடம் கொடுத்தார். பிறகு, இதை கேரள நிவாரண நிதிக்கு கொடுக்கிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுத்தார். இதைக் கண்டு ஆட்சித் தலைவர் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். ஏனென்றால் பிரஜாபதி, ஒரு பிச்சைக்காரர். அதோடு அவர் கேன்சருக்கும் சிகிச்சை எடுத்து வருகிறார். சீரியசான நிலையில் இருக்கும் அவர், உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிவாரண உதவித் தொகை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மழை வெள்ளத்தால் கேரளா மாநிலம் முழுவதுமாக பாதிப்படைந்துவிட்டது என்று கேள்விபட்டேன். அந்த மாநிலத்துக்கு குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்கள் உதவி வருவதை அறிந்தேன். நானும் ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். நான் பிச்சை எடுத்து சேமித்த ஐந்தாயிரம் ரூபாயை நிவாரண உதவிக்கு வழங்கி இருக்கிறேன்’ என்றார்.
’தன்னலமற்ற அன்புக்கு உதாரணம் இவர். கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரரின் தியாகமும் சமூகத்தின் மீதான பக்தியும் பாரட்டப்பட வேண்டியது’ என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் ஹர்ஷத் வோரா.
பிரஜாபதி, இதற்கு முன்பு தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை கொண்டு ஏழை சிறுமிகளின் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக 10 தங்கத் தோடுகளை பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(சிறுமிகளுக்கு உதவியபோது...)
கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் பிரஜாபதிக்கு வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மனித நேயத்தை பாராட்டி, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல்கட்ட சிகிச்சைக்கு ரூ. 70 ஆயிரத்தைக் கொடுத்தது. சூரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ரூ. 30 ஆயிரம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஹர்ஷத் வோரா, பிரஜாபதிக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக முடிவு செய்துள்ளார்.