மருத்துவமனையில் கவனிக்கப்படாத நோயாளியை கடித்த எலி !
உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில் மருத்துவர்களால் கவனிக்கப்படாத புற்றுநோய் பாதித்தவரின் கால் விரலை எலி கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 49000 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் 12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 568ஆகவுள்ளது. 32ஆயிரத்து 138 பேர் சிகிச்சையிலுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமநாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் 40 வயதான சாக்சி கண்டேல்வால் என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இப்போது மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், சாக்சிக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை தரையில் ஒரு போர்வைக் கொண்டு படுக்க வைத்துள்ளார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு போர்வையை விலக்கி பார்த்த சாக்சியின் கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சாக்சியின் கால் விரலை சத்தமின்றி எலியொன்று கடித்துள்ளது. எலி கடித்த வலி தெரியாததால் சாக்சி அசைவின்றி இருந்துள்ளார். ஆனால் விரல்களிலிருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டு இருந்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாக்சிக்கு கடந்த சில நாள்களாக எந்தவொரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எலி கடித்ததற்கும் கணவரே மருந்தகத்துக்கு சென்று ஆயின்மென்ட்டும், பேண்டேஜூம் வாங்கி வந்து காயத்துக்கு மருந்துபோட்டுள்ளார். இது குறித்து கணவர் மருத்துவமனை நிர்வாகத்திடமும் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாக்சியின் உடல்நிலை மோசமானது என தெரிந்ததும், அவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துள்ளது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.