லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கான கையேட்டில் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்புடைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு மத்திய அரசு ஊழியரை கையும் களவுமாக பிடிக்கும் வகையில் வலை விரிக்கப்பட வேண்டிய சூழலில், மத்திய அரசு காவல்துறையின் பிரதிநிதிக்கு தெரிவிப்பதற்கு போதிய அவகாசம் இல்லாவிட்டால் மாநில காவல்துறையினர் வலை விரித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு கைது செய்யப்பட்ட பின்னர் மத்திய அரசின் காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் விசாரணையை மத்திய அரசு காவல்துறையினர் தொடர்வதா அல்லது மாநில அரசு காவல்துறையினர் தொடர்வதா என்பதை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தால் சாட்சியங்களை சேகரிக்க தேவையான நடவடிக்கைகளை மாநில காவல்துறையினர் எடுக்கலாம் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.