டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா செய்வது ஏன் என்று, டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு அனுமதி அளித்தது யார் என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் மாளிகையில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் 8ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தை தொடரும் நிலையில் டெல்லி நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, கெஜ்ரிவால் மற்றும் மூன்று அமைச்சர்கள் கடந்த திங்கள்கிழமை மாலை முதல் துணை நிலை ஆளுநர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.