உத்தரப்பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி பரிசுகளை பெறக் கூடாது என்று புதிய உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். முதலில் அரசு கூட்டத்தின் போது கைப்பேசியை உபயோகிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் அவர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு கண்டிப்பாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற ஆணையை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மற்றொரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், “இனிமேல் பொதுமக்கள் யாரும் சட்டப்பேரவை வளாகம் மற்றும் பிற அரசு கட்டடங்களில் பரிசுகளுடன் நுழைய கூடாது. மேலும் அரசு அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி பரிசுகளை வாங்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பயன்படுத்துபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்குள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் யாரும் நுழைய கூடாது என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏனென்றால் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் துப்பாகி ஏந்திய பாதுகாப்பு நபர்களுடன் அரசு அலுவலகத்திற்குள் வருவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.