ராஜஸ்தானில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், எல்லா சம்பவங்களையும் தடுத்து நிறுத்த முடியாது என்று அம்மாநில அமைச்சர் குலாப் கட்டாரியா கூறியுள்ளார்.
அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த உமர்கான் என்பவர் அவரது உதவியாளர்களுடன் 4 பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள காத்மிகா கிராமத்திற்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, உமர்கானின் வாகனத்தை சிலர் வழிமறித்து அவரையும், உதவியாளரையும் தாக்கியுள்ளனர். பசுப் பாதுகாவலர்கள் என்று கூறுபவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள், உமர்கானை சுட்டுக் கொன்றனர். அவரது சடலம் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
அரியானாவைச் சேர்ந்த பால் விவசாயி கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்ட அல்வார் மாவட்டத்தில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் கட்டாரியா, “அவரது வாகனத்தில் 5 பசுக்கள் இருந்துள்ளன. அதில் ஒன்று இறந்தநிலையில் இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து சொல்ல முடியாது. எல்லா சம்பவங்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு எங்களிடம் போதிய காவலர்கள் இல்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.