கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சித்த ரஞ்சன் தாஸ் நேற்றுடன் ஓய்வுபெற்றார். இதற்கிடையே அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அதில் அவர் பேசியிருக்கும் கருத்துகள்தான் தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். நான், என் குழந்தைப் பருவத்தில் இருந்து எனது இளமைக்காலம் முழுவதும் அதில் இருந்தேன். நான் தைரியமாகவும் நேர்மையாக இருக்கவும், மற்றவர்களை சமமான கண்ணோட்டத்தில் பார்க்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த வேலை செய்தாலும் தேசபக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க அங்குதான் கற்றுக் கொண்டேன். ஆனால், 37 ஆண்டுகளுக்கு முன்பே அமைப்பில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.
எனது பணியின் முன்னேற்றத்திற்காக ஒருபோதும் அமைப்பின் அடையாளத்தை பயன்படுத்தியது இல்லை. ஏனெனில், அது எங்களின் கோட்பாட்டுக்கு எதிரானது. நீதிபதியாக எனக்கு முன் அனைவரும் சமம். நான் யாருடனும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்துக்கும் அல்லது அமைப்புக்கும் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை. நான் என் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாததால், நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு தைரியம் இருக்கிறது. ஏனென்றால் அதுவும் தவறு அல்ல” எனத் தெரிவித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கு ஒன்றில் இவருடைய தலைமையிலான அமர்வு, “டீன் ஏஜ் பெண்கள் பாலியல் உந்துதல்களை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட மகிழ்ச்சிக்கு இடமளிக்கும்போது அவர் சமூகத்தின் பார்வையில் தோற்றவராகவே கருதப்படுவார். பெண்கள் தங்களின் கண்ணியம் மற்றும் தங்களின் சுயமதிப்பை பாதுகாப்பது அவர்களின் கடமை. டீன் ஏஜ் பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டியது ஆண்களின் கடமை. அதற்கு டீன் ஏஜ் ஆண் தனது மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்” என கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.