”1 கி.மீ-க்கு ரூ.250 கோடி செலவா?”-7 திட்டங்களில் முறைகேடுகள் என சிஏஜி அறிக்கை! திரும்புகிறதா வரலாறு?

9 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது. ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.
cag, central government
cag, central governmentfile image
Published on

7 திட்டங்களில் முறைகேடுகள் - மத்திய தணிக்கைக் குழு பரபரப்பு அறிக்கை

1. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்குத்தணிக்கைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2.துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு திட்டச்செலவான 18 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாய் செலவழித்தது ஏன் என்பது கணக்கு தணிக்கைக்குழுவின் கேள்வியாக உள்ளது.

3.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

5. அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

6. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், மத்திய அரசின் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

7. எச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய கணக்கு தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த 7 விவகாரங்கள் குறித்து இனி விரிவாக பார்க்கலாம்..

மத்திய கணக்குத் தணிக்கைக் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடு புகார்களை விரிவாக பார்க்கலாம்.

”இரண்டு மடங்காக நிதி ஒதுக்கப்பட்டது எப்படி?” - பாரத் மாலா முறைகேடு புகார் :

நாடு முழுவதும் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலைகளை இணைக்கும் பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 26,316 கிலோ மீட்டர் சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையின் ஒப்புதல்படி பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க15.37 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முறைகேடாக இத்திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

”ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடியா?” - துவாரகா நெடுஞ்சாலை ஊழல் புகார் :

நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையை சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் டெல்லியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 14 மடங்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டண முறைகேடு:

ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை ஆய்வு செய்தபோது அவை ரூ.154 கோடி அளவிற்கு அதிக தொகையை வசூல் செய்திருப்பது தெரியவந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

”ஒரே செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள்” - ஆயுஷ்மான் பாரத் ஊழல் புகார்!

2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து வெறும் ஏழே ஆதார் அட்டை எண்களுடன் 4,761 காப்பீடு அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையின் போது இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப்பட்டிருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

”குறைவாக செலுத்திய உத்தரவாத தொகை” - அயோத்யா மேம்பாடு திட்ட ஊழல் :

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்தாரர்களுக்கு பணி கொடுக்கும்போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார்.

ஆனால் அவருக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒப்பந்ததாரர்கள் 19.73 கோடி ரூபாய் அளவிற்கு அதிக லாபம் அடைந்திருப்பதாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியதால் சுமார் 8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.

விளம்பரத்திற்காக ஓய்வூதிய திட்டத்தில் முறைகேடு?

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை 19 மாநிலங்களில் விளம்பரப்படுத்த தலா 5 விளம்பரப்பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் பணத்தை ஓய்வூதிய திட்டநிதியைக் கொண்டு செலவு செய்யப்பட்டுள்ளது.

ஹெச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பு ஊழல்:

ஹெச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், தவறான திட்டவடிவமைப்பு கோளாறுகள், உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2022 மார்ச் நிலவரப்படி சுமார் 159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட சிஏஜி வெளியிட்ட 7 ஊழல் பற்றிய முழுத் தகவலை மேலே உள்ள வீடியோ பதிவில் காணலாம்.

2 ஜி வரலாறை போல் மீண்டும் புயல் கிளம்ப்போகிறதா?

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கைதான் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்க முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. சிஏஜி அறிக்கையை கையிலெடுத்த பாஜக 1,76,000 கோடி ஊழல் என மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்து பலனையும் அறுவடை செய்தது. பின்பு நீதிமன்றத்தில் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா விடுவிக்கப்பட்டது (2019) தனிக்கதை. அதேபோல், தற்போது சிஏஜியின் அறிக்கையினை காங்கிரஸ் கையிலெடுத்து பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இருப்பினும் இதை தொடர்ச்சியாக எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொண்டு செல்லும் என்பதை பொறுத்தே அதன் தாக்கத்தை எதிர்பார்க்க முடியும். அதேபோல், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க பாஜக தரப்பிலும் வியூகம் நிச்சயம் வகுத்திருப்பார்கள். இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com