ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தணிக்கை வாரியத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மக்களவை தேர்தலிலும் ரஃபேல் விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கையை மத்திய தணிக்கை அதிகாரி ராஜீவ் மெகரிஷி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். ராஜீவ் மெகரிஷி, நிதித்துறை செயலராக இருந்தபோது, ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால், அவர் அறிக்கையை தாக்கல் செய்யக் கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிஏஜி அறிக்கையில் ரஃபேல் விமானம் வாங்குவதற்கு சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த விவரங்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. ரஃபேல் விமானத்தின் விலை குறித்த தகவல்கள் ரகசியம் கருதி இந்த அறிக்கையில் இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது.