பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்: 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்: 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்: 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
Published on

குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் சிங், அஷ்வினி குமார், கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் சிங், ஷிப் பிரதாப் சுக்லா, கேரளாவைச் சேர்ந்த கே.ஜே.அல்ஃபோன்ஸ், டெல்லியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 73 இல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இடம் பெற முடியும்.

இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி நிர்மலா சீதாராமன் தான். மேலும், 5 மூத்த அமைச்சர்கள் அடங்கிய பாதுகாப்புக்கான கேபினட் குழுவில் சீதாராமன் இடம்பிடித்துள்ளார். அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி இடம்பெற்றுள்ளனர். 

நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் உடன் தர்மேந்திர பிரதான் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது.

2019 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று காலை பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை பிரதமர் இல்லத்தில் சந்தித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com