திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மாற்று பாலினத்தவர்கள் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ஏதுவாக, அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவை குழுவுக்கு நீதித்துறை அனுப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது. அதில் ‘மாற்று பாலினத்தவர்களுக்கும் சமூக அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; கல்வியிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; அவர்களும் பிற இந்தியர்களை போல சம அந்தஸ்துடன் வாழ உரிமையுள்ளவர்கள். இவை அனைத்தையும் அரசு அவர்களுக்கு உறுதிசெய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
இதை அடிப்படையாக வைத்தே, தற்போது சமூக நீதித்துறையின் வரைவு தயார் செய்யப்பட்டு அமைச்சரவை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பான பல ஆலோசனைகளை மத்திய சமூக நீதித்துறை கலந்தாலோசித்து உள்ளது.
இந்த வரைவு அறிக்கையின் சாராம்சத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்ற பின்னர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பின் இத்திட்டம் வழக்கத்துக்கு வரும்.