ரூபே கிரெடிட் கார்டு , யுபிஐ பண பரிவர்த்தனைகள் - மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவு

ரூபே கிரெடிட் கார்டு , யுபிஐ பண பரிவர்த்தனைகள் - மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவு
ரூபே கிரெடிட் கார்டு , யுபிஐ பண பரிவர்த்தனைகள் - மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவு
Published on

ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஏப்ரல் முதல் ஓராண்டு காலத்திற்கு ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை (நபரிலிருந்து வணிகருக்கு) மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம் யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு 2022 -23ம் ஆண்டில் 2600 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் முனைய வணிகம் மற்றும் மின்னணு வர்த்தகத்தை ரூபே மற்றும் குறைந்த மதிப்பு யுபிஐ மூலம் மேற்கொள்வதை ஊக்குவிக்க வங்கிகளுக்கு நிதி ஊக்கத் தொகை வழங்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் டிஜிட்டல் பரி்வர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான நிதியுதவிகள் தொடரும் என்று அறிவித்தார். அதன்படி, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021-22ம் நிதியாண்டில் பட்ஜெட் அறிவிப்புக்கிணங்க அரசு ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தது. அதன் விளைவாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆண்டுக்கு 59 சதவீதம் அதிகரித்தது. பீம்-யுபிஐ பணப்பரிவர்த்தனை 106 சதவீத வளர்ச்சியை எட்டியது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பில் உள்ள பல்வேறு தரப்பினர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகமும், பீம்-யுபிஐ மற்றும் ரூபே கடன் அட்டை பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்படி கோரிக்கை விடுத்தன.

மத்திய அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சிக் கண்டுள்ளது. கொவிட் பாதிப்பு  காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரித்தது. 2022 டிசம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் சாதனை அளவாக 12 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்புத் திட்டம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை மேலும் வலுவாக்கும். அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நோக்கத்திற்கிணங்க, யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தீர்வுகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து வலுவாக்க  இந்த திட்டம் உதவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com