கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி
Published on

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை 2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதியிலும், 2025-26 நிதியாண்டு வரையிலும் 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை மறுசீரமைத்து தொடர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது இந்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் மத்தியத்துறை திட்டமாகும். குடிநீர், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்டவற்றில் தங்கள் தொகுதிகளில் நீடித்து நிலைக்கும் சமுதாய சொத்துக்களை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சிப் பணிகளை பரிந்துரைக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும். இரண்டு தவணைகளாக தலா ரூ 2.5 கோடி வழங்கப்படும். கொரோனாவை எதிர்கொள்ளும் பொருட்டு 2020 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தாமல், அந்த நிதியை கொரோனா மேலாண்மைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

நாடு தற்போது பொருளாதார மீட்சியை நோக்கி நடைபோடுவதால், இத்திட்டத்தை மறுசீரமைத்து 2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதியிலும், 2025-26 நிதியாண்டு வரையிலும் 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை தொடர அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com